Wednesday, March 25, 2009

அவனுக்குப் பிறகு ...

பிணவாடை மூச்சுத் திணற
தாளிடப்படாத அறைக்குள்
புகுந்தேன் .

உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தான் அவன் .

இரத்தம் கசியும் உடலோடு
அலறிக் கொண்டிருந்தன
அன்றைக்கு அவன் பிரசவித்த வார்தைகள் .

கிழக்கு மூலையில்
வார்த்தைகளை புசித்துக் கொண்டிருந்தது
அந்தக் கருப்புப் பூனை .

மிஞ்சியவைகளை
மீன்தொட்டியில் கழுவினேன்
வாய்பிளந்து
இரத்தம் சுவைத்தது
மீன்கள்

ஒவ்வொன்றாக கோர்த்து
மலையாகினேன்
சடலத்துக்கு

கவிதை என்றார் ஒருவர்
கோழையின் அழுகுரல்
என்றார் மற்றொருவர்

பூக்களின் வாசம்
என்றார் ஒருவர்
பிணக்குவியலின் துர்வாடை
என்றார் மற்றொருவர்

இன்னிசை
என்றார் ஒருவர்
இரைச்சலின் ஊற்றுக்கண்
என்றார் மற்றொருவர்

கடவுளின் அன்பு வெளி
என்றார் ஒருவர்
சாத்தானின் பிரவாகம்
என்றார் மற்றொருவர்

ஞானியின் சித்தாந்தம்
என்றார் ஒருவர்
பைத்தியக்காரனின் உளறல்
என்றார் மற்றொருவர்

அகோராத்திரத்தில்
பிரபஞ்சமெங்கும்
நித்தியத்துவத்தின் மேல்
ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன
அந்த வார்த்தைகள்...

Friday, March 20, 2009

வேறு வேறாக ...

இருவருக்கும் சேர்த்துதான்
பயணச்சீட்டு
வாங்கினாள்

இன்றைக்குத் துளிர்த்த
இலையின் நிறத்தை ஒத்த
புடவை அணிந்தவள்
ஜடையில் மல்லிகை


அதிகாலை வானத்தின்
நிறத்தை ஒத்த
சுடிதார் அணிந்தவள்
ஜடையில் கனகாம்பரம்

ஒருத்திக்கு மணம்
அடுத்தவளுக்கு நிறம்

அவரவர்
மணமும் நிறமும்
அவரவர்களுக்கு

நமக்குத்தான்
எல்லாமும்
வேறு வேறாக ...



Wednesday, March 18, 2009

சாட்சியாக..

நேற்றைக்கு போல்
இருப்பதில்லை
இன்றைக்கு

அதிகாலை வானமும்
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையின் முகமும்
வாசல் முருங்கை மரமும்
மாரியம்மன் ஆலயமும்
பூக்காரியும்
மல்லிகைப் பூக்களும்
அந்தக் கவிதையின் வரியும்
நானும்
அவர்களும்
எல்லோரும்
எல்லாமும்
உருவாக்குதலோ
உருமாற்றுதலோ

காலக்கடவுளின்
சாட்சியாக...

தனிமையற்றது...

எதையாவது
பாடிக்கொண்டே இருக்கிறது
பியானோ

எதையாவது
வாசித்துக்கொண்டே இருக்கிறது
புத்தக அலமாரி

தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்

எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள்

தனிமைகள் அற்றது
அறை ...

சிறுவனின் பரிசு

அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.

இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி

வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்

பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்

Sunday, March 15, 2009

இறகின் இசை ....

அடை மழை நாளொன்றில்
அறைக்கு வந்தது
மின் விசிறியின் மேல் அமர்ந்து
உடல் உலுக்கியது.
மென்காற்றில் மிதந்து
மெதுவாக
அமர்ந்தது
நண்பனின் பியானோ மீது
ஒரு இறகு
பிறகு அறை முழுவதும்
வியாபித்து இருந்தது
இறகின் இசை .....

Saturday, March 7, 2009

குருவிகள் .....

அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...