Friday, June 26, 2009

புன்னகை.

புத்தகமொன்றின் பின்னட்டையில்
வார இதழின் பக்கமொன்றில்
எப்பொழுதோ தொலைக்காட்சியில்
பார்த்திருக்கிறேன்

எதிரே வருவது
அவர் தானா ?
தெரியவில்லை

நான் புன்னகைக்க அவரும்
அவர் புன்னகைக்க நானும்
காத்துக்கொண்டிருந்தோம்

கடந்துவிட்டிருந்தோம்
இழப்பின் அதிர்வோடு
புன்னகைக்காமலே .

Sunday, June 21, 2009

நேரெதிர் பயணம்

சப்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன
இலைகள்

நிலவின் பாலொளி
சூழ்ந்திருக்கிறது

ஹார்மோன்களில்
மிதந்து கொண்டிருக்கிறது
மல்லிகை வாசனை

பட படத்துக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்

கண்களில் வழிந்த நீர்
கரைத்து விடுகிறது
இடைவெளியை

வேர்கள் அதிர
முத்தமிடுகிறார்கள்

கட்......கட்......கட்......
டேக் ஓகே
என்றான் சத்தமாக
தாடிவைத்த ஒருவன்

பிறகு
நேரெதிர் திசையில்
பயணிக்கிறார்கள்
இருவரும்.


Friday, June 12, 2009

உற்றுநோக்கிய பொழுது.

இரவில் பசித்த பூனையென
சத்தம் போடுகிறது

பழுத்து விழுந்த
இலையோடு காற்றில்
நடனமாடுகிறது

தவழும் குழந்தையோடு
மழலை நேசம் கொள்கிறது

முகத்தில் அப்பிய
துப்பட்டாவை இழுத்துச் சென்றவளோடு
தேநீர் அருந்துகிறது

அடர்ந்த இருளில்
ஜொலித்துக் கொண்டிருந்த
நெருப்பில்
விழுந்த வவ்வாலென
துடிக்கிறது

அடுத்த நிகழ்வுக்கான
அவதானிப்பு ஏதுமில்லை

சிவப்பிலிருந்து பச்சைக்கு
மாறுகிறது விளக்கு

மிக அருகில் கேட்கிறது
செல்லவேண்டிய
இரயிலின் சத்தம்.

Thursday, June 4, 2009

உயிர்ப்பை உணர்ந்த பொழுது.

திடீரென அடர்ந்த
இருளுக்குள் தள்ளிவிடப்படுகிறேன்.

மூச்சுத்திணற
அந்த குகைக்குள்ளிருந்து
வேகமாக வெளியேறுகிறேன்

எனக்காக
காத்திருந்த பாவனையில்
நின்ற எருமை
துரத்த ஆரம்பிக்கிறது

இறந்துபோன மூதாதையர்கள்
எனக்காக
பிரார்த்தனை செய்கிறார்கள்

முப்பாட்டியின்
சமாதியில் நிற்கும்
ஆலமரத்தின் விழுதொன்றால்
இறுக கட்டிவைக்கிறேன்
அந்த எருமையை

கதிரவன் மேனிதழுவ
துயிலெழுகிறேன்
கண்களை அகலவிரித்து
பெருமூச்சு விடுகிறேன்
கனத்து துடித்துக்கொண்டிருக்கிறது
இதயம்.

Tuesday, June 2, 2009

நம் வானில்.

உன்னோடு ஊடல்
கொண்ட பொழுதுகளில்
நிரம்பி வழிகிறது
வெறுமை

பூக்களின் பள்ளத்தாக்குகளை
நினைவு படுத்துகின்றன
பிரியத்தில் நீ
உதிர்த்த வார்த்தைகள்

அந்தரங்கங்களை
பேசிக்கொண்டிருந்த இரவுகளில்
தானாய் வழிகிறது
மேகம்

விடுமுறை நாட்களில்
வீடுவரும் பொழுதுகளில்
கருமேகமென திரண்டயென்னை
நிலமென உட்கொள்கிறாய்

பிறகு
வானவில்லின் நிறமுடுத்தி
மிதந்து கொண்டிருப்போம்
நம் வானில்.