Thursday, March 28, 2013

மழையும் , பாம்புகளும்

வெகு தொலைவிலிருந்து
கவனிப்பாரற்று
உமிழ்ந்து கொண்டிருக்கிறது
வெறுப்பின் விஷமேறிய
கூர் பற்களை

சலனமற்ற ஆற்றின்
மேல்பரப்பில் தவழ்ந்து
தன்னைத் தனித்து
அலையெழுப்புகிறது

கவிழ்ந்த மலையென
தடித்து அடர்ந்து கிளைவிட்ட
ஆல விழுதுகளில்
மஞ்சள் அலகை  உரசி
விளையாடிக் கொண்டிருகின்றன
சாம்பல் நிறமொத்த
பெயரற்ற பறவைகள்

வெள்ளைப்   பஞ்சுத் துண்டுகள்
ஒன்றோடொன்று மோதி
யானைக் கூட்டங்களென
திரண்டு நிற்கின்றன

காலிடறி விழுந்து
காலுதறி பிரண்டு
வேகமாய் நகரும் வரிசைக்குள்
நுழைந்து கொள்கிறது

கண்ணிர் சுரக்கும்
மழைப்  பாடலின்
கடைசி வரியின்
பிரக்ஞையற்று
மூலையில் கருத்த பிசாசின்
மடியில் சுருண்டு
பாம்புகள் பற்றிய
கனவொன்றில் உறையத் துவங்கிற்று.

Monday, March 25, 2013

பிடித்தம்

அஸ்கருக்கு
முகத்தில் பருக்கள் வந்திருக்கிறது

இப்போதெல்லாம் அவனுக்கு

செடிகள் வளர்க்கப் பிடிக்கிறது
பறவைகள் வளர்க்கப் பிடிக்கிறது
மீன்கள் வளர்க்கப் பிடிக்கிறது

கைப் பேசியில்
பாடல்கள் கேட்கப் பிடிக்கிறது

கைகளை காற்றில்
சிறகென விரித்து
சைக்கிளில் பறக்கப்  பிடிக்கிறது

வாப்பாவின் பைக்கை
யாருக்கும் தெரியாமல்
ஓட்டப்  பிடிக்கிறது

திருச்செந்தூர் பாசஞ்சரில்
சிகை பறக்க
காற்றோடு மோதும்
படிக்கட்டுப் பயணம்  பிடிக்கிறது

வீட்டில்
தனக்கென்று ஒரு அறை
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

அதிக நேரம்
கண்ணாடி முன்னின்று
கவனமாக தனக்குப் பிடித்தமாதிரி
தலை வாரிக்கொள்ளப்  பிடிக்கிறது

எப்போதும்
கைகுட்டையோடு ஒரு சீப்பையும்
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

கதீட்ரல் நிருத்தத்தில் இறங்கும்
எஸ்தரின் தலையிலிருந்து விழுந்துவிட்ட
ரோஜாப்  பூவும் பிடிக்கிறது.


நன்றி - உயிரோசை

Thursday, March 21, 2013

குருவிகள் (மீள்பதிவு)


அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

000

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...

நன்றி - உயிரோசை

உல‌க‌ சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு (20-03-2013)
http://en.wikipedia.org/wiki/World_Sparrow_Day

Saturday, March 16, 2013

எழுத்து விளையாட்டு

பெட்டியில் இருந்த
ஒரு எழுத்தை
கையில் எடுத்து

"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "V" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "I" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "B" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "G" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "O" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "R" சொல்லு

"A" எந்த நிறத்தில் இருக்கும் ?
"A" க்கு ஏதும் நிறமுண்டா ?

"A" நிச்சயமாக
      அந்த பெட்டிக்குள்
      இருக்க வேண்டுமா என்ன?


நன்றி - உயிரோசை




Thursday, March 14, 2013

பீப்பாய் விளையாட்டு -2

பீப்பாயின்
வாய் பிளந்த பகுதியை
காதருகில் வைக்கிறான் 


தலை சுருக்கி
நாடி நெஞ்சையழுத்த
கன்னங்கள் மேலெழும்பி   
கண்களைச் சுருக்கி
வெள்ளை பற்கள் தெரிய
சிரிக்கிறான்

சமனிலை இழந்த நடையோடு
என் காதருகில்  வைக்கிறான்

மெல்லிய பனித்திரையில்
பெருஞ்சினங்கொண்டு
ஆர்பரிக்கிறது
நீலக்கடல்

மீண்டும்  மீண்டும்
காதருகில் வைக்கிறான்

கைதட்டிச் சிரிக்கிறான்

     
    

Wednesday, March 13, 2013

பீப்பாய் விளையாட்டு -1

பெரிய பீப்பாயை திறந்து 
சின்ன பீப்பாயை விடுவிக்கிறான்

ஒரு முட்டையிலிருந்து குஞ்சை
விடுவிப்பதைப் போல

பிறகு
சின்ன பீப்பாயை மீண்டும்
பெரிய பீப்பாய்க்குள் அடைக்கிறான்

குஞ்சை மீண்டும்
முட்டைக்குள் அடைப்பதைப்  போல
தோன்றுகிறது.


அபத்தம்


ஒரு நரைமயிரின் அளவு
மெல்லிய கீறல் விழுகிறது
எனது  பிரபஞ்ச விதியின் மேல்

அவள் 
தனது கைக்கடிகாரத்தை
1,12,11...
சுழற்றிக் கொண்டிருக்கிறாள்.










Tuesday, March 12, 2013

பீப்பாய் விளையாட்டு


கருப்பு , வெள்ளை , சிவப்பு ,பச்சையென 
வெவ்வேறு நிறங்களில்
பெரிதும் , சிறிதுமா
பீப்பாய்கள்
விளையாடக் கிடைத்தன
ஒரு வயதான மகனுக்கு.

பீப்பாய்களை 
தனித்தனியே வரிசையாக அடுக்கினான் 
பிறகு 
ஒன்றன் மீது ஒன்றாக  அடுக்கினான்

பெரிய பீப்பாய்க்குள்
சின்னதை வைத்துப் பூட்டினான்

பெரிய பீப்பாயை
சின்ன 
பீப்பாய்க்குள்
வைத்துப் பூட்டச்   சொன்னேன்

ஒரு அசட்டுச்  சிரிப்போடு
நிராகரித்து விட்டு
விளையா
ட்டைத்  தொடர்ந்தான்  









Friday, March 8, 2013

பிரஞ்னையற்ற பொழுதுகள்

அந்தக் கோடை
மிகவும் மோசமானதாக இருந்தது

எனது
நீரை முற்றிலுமாக உறிஞ்சியது

எனது
உணவுகளை களவாடியது

எனது
ஆடைகளை , கூடாரங்களை எரித்தது

எனது
தலையைப் பற்றி  இழுத்தன
இறப்பின் அருவருப்பான கைகள்

எனது
ஆன்மா உயிர்ப்பின்
பாடலொன்றை முணுமுணுத்தது

எனது
பரிசுத்தமான காதலின்
உயிர்த் துளியை
உன் மீது வீசினேன்

மழை மேகங்களைத் தந்தாய்

எனது
பிரபஞ்சத்தை
நானே 
உருவாக்கினேன்


நான்
மீண்டு வந்தேனா?
அல்லது
காலத்தின் கருணையா?