Thursday, November 14, 2013

நிலவென

கவிதையின்  வருகைக்காக
காத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில்
நிலவென வந்தாய் .

Thursday, June 13, 2013

பிரியங்களுக்காக

கண்விழிக்காமல் காற்றில்
முலை தேடும் பிள்ளையை
என்ன சொல்லி தேற்றுவது ?

சீத்தாப்பழம் கொறிக்கும் அணில்களை
வேப்பம்பழம் கொத்தும் காக்கைகளை
புல்மேயும் பசுக்களை
பால்குடிக்கும் பூனைகளை
மீன்முள்   கடிக்கும் நாய்களை  யெல்லாம் கட்டி
எத்தனை நாட்களை கடத்துவது  ?

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்களுக்கான ஆறுதல்

யுகங்களென கழியும் நாட்களை தவிர்த்து
வாசல் கதவிற்குப்பின்னால்
காத்துக்கிடக்கிறோம்
உனது காலடி ஓசையில்
உதிரும் பிரியங்களுக்காக .Tuesday, June 11, 2013

பதைபதைக்கும் பிரிவின் கணங்கள்

எப்படி எதிர்கொள்வதென்று  தெரியவில்லை?
எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று புரியவில்லை ?
எப்படியிருக்கும்  நீ பிரியும் அந்த கணம் ?

நீ தரப்போகும் அந்த முத்தத்தை
எப்படி ஏற்றுக்கொள்வது?

கால் பெருவிரலில் சிந்தும்
கண்ணீர் துளியை என்ன செய்வது ?

உன் கையசைப்புக்கு
நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ?

ஏற்கவும் நிராகரிக்கவும்
முடியாமல் தவிக்கும் என்னை
எப்படி எதிர்கொள்வாய்?

மலையை கடக்கும் புளுவென
அந்தக் கணத்தை நோக்கியே நகரும் காலத்தை
நிதானிக்கவே முடியவில்லை

இப்போது
என்னை குழந்தையாக மாற்றும்
ஒரு புத்தகமொன்றிற்குள் ஒளிந்து கொள்ளப்போகிறேன்


  

Friday, May 31, 2013

நடுச்சாமத் தீராப்பசி

கனன்று மினுமினுக்கும்  கண்களுடன்
புலியின் தோரணையுடன்
பளபளக்கும்   தரையில்
மகரந்தங்கள் படிவதையொத்த நடையுடன்
பால்தேடி அலைகின்றன
பூனைகள் .

Sunday, May 19, 2013

-நகுலன் (வாக்குமூலம்)


என் "எழுத்துக்கள்" தான் என்னை ஒரு நிலையில் வைத்திருக்கின்றன.
ஒவ்வருவரைப் பார்கையில், ஒவ்வொரு அனுபவம் என்னை பாதிக்கையில் நான் அவர்களின் அவைகளின் நிழல்கள் ஆகி விடுகிறேன் .நான் 'ஏதோ ஒன்றின்' நிழலாக இயங்கி வருவதால் தான் என் ஜென்மமே சாபல்யமடைகிறது என்று இடைவிடாமல் என்
உள்ளில் ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது.எனக்கே நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியவில்லை.அனால் வேறொன்றின் மூலம் தான் நான் இயங்குகிறேன் என்ற ஒரு உணர்வும் கூடவே என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ பார்த்தாகி விட்டது எனக்குத் தூக்கம் வருகிறது.இந்த உறக்கத்தில் இனி கனவுகள் இல்லை. இந்த உறக்கம் கலைவதையும் நான் விரும்பவில்லை.

-நகுலன் (வாக்குமூலம்)  

Tuesday, May 14, 2013

நிச்சயம் வெளியேறி விடுவேன்

பக்கம் எண் 25 - 27 ஒட்டியிருந்தது 

புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணன் ஒருவனின் 
கத்தரிக்கோலால்   
 
அவனின் 
புத்திகூர்மையோடும் 
உற்சாகத்தோடும்
பரவசத்தொடும் 
கனிவோடும்
நம்பிக்கையோடும்
கத்தரித்தேன்

சிவப்புப் புள்ளியோ 
அதன் வாசனையோ
இல்லவே இல்லை  

"நிச்சயம் வெளியேறி விடுவேன் " என்கிறார் 
சுவர்களுக்குள் 
சுகுமாரன்.      

Monday, May 6, 2013

நிபந்தனை

உண்ண உணவு
உடுக்க உடை
உறங்க இடம்

கிடைக்கிறது

கண்கள் பார்க்கக்கூடாது
காதுகள் கேட்கக்கூடாது
வாய் பேசக்கூடாது
கை எழுதக்கூடாது

என்ற நிபந்தனையோடுஆதல்

காது கிடையாது
கேட்க முடியும்

கண்கள் கிடையாது
பார்க்க முடியும்

வாய் கிடையாது
பேச முடியும்

கைகள் கிடையாது
கொடுக்க முடியும்

வேண்டுதல் உண்டு
வழிபாடு  கிடையாது

நானாக
நீயாக
அவனாக
அவளாக
அதுவாக ஆனது
நடுச்சாமத்தில் செய்த கடவுள்

Saturday, April 13, 2013

உண்டல்லவே

தெளிவாக தெரியத்துவங்கியது
கட்டங்கள்

அவர்கள்
விட்டுச்சென்ற அதே
நிலையில்

அருவாளோடு
துடியான சாமிவந்தாடும்
பெரிய வெள்ளை மீசைக்காரருக்கு
பதிலாக நீ

மேய்ப்பர் அற்ற
உனது இரைக்குப் பதிலாக
நான்

உனது பாய்ச்சலில்
சிக்கிக்கொள்ளாத
சாதுர்யமான எனது நகர்தல்
ஆச்சர்யமாய் இருக்கிறது

உயிரின் பிரியம் யாவருக்கும்
உண்டல்லவா?
   
 

Monday, April 1, 2013

கூடடைதல்

பச்சை விளக்கிற்கு
காத்திருக்கும் நொடிகளிலும்
விலங்கென உருமிக் கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

தார்ப்பாய் போட்டு மூடப்படுகின்றன
சாலையோர கடைகள்

கிளிப்பின் வாய்திறந்து விடுவிக்கப்படுகின்றன
காய்ந்த ஆடைகள்

எல்லா வீடுகளிலும்
ஜன்னல்கள் அடைக்கப்படுகின்றன

காற்றின் திசையில்
முதுகைக் காட்டி நிற்கின்றன
மரங்கள்

மின்கம்பியிலிருந்து விடுத்து
கரைந்து பறக்கின்றன
காக்கைகள்

வெண்மேகங்கள் கூடி
கருத்து நிற்கின்றன
அந்தப் பிரதேசத்தின் மேல்


கூடடைதலின்
கனவில் நனைந்து கொண்டிருக்கின்றன
பறத்தலை மறந்த
கூண்டுப் பறவைகள்
வேட்கை

மாமிசத்தை கிழித்துண்ணும்
கூர்மையான
இளமஞ்சள் அலகுகள்

சோர்ந்து
ஆனால் மினுமினுக்கும்
கருத்து உருண்ட கண்கள்

மரக்கிளையில் கவ்விநிற்கும்
கூர்நகங்களுடைய
கருத்த கால்கள்

களைப்பின்றி
சமுத்திரம் தாண்டும்
வெள்ளை சிறகுகள்

கூண்டின் மறுமுனையிலிருந்து
என் மீதான பாய்ச்சலொன்றில்
அடர்ந்து அதிர்ந்து
ஒலிக்கின்றன
பறத்தலின் வேட்கை.


Thursday, March 28, 2013

மழையும் , பாம்புகளும்

வெகு தொலைவிலிருந்து
கவனிப்பாரற்று
உமிழ்ந்து கொண்டிருக்கிறது
வெறுப்பின் விஷமேறிய
கூர் பற்களை

சலனமற்ற ஆற்றின்
மேல்பரப்பில் தவழ்ந்து
தன்னைத் தனித்து
அலையெழுப்புகிறது

கவிழ்ந்த மலையென
தடித்து அடர்ந்து கிளைவிட்ட
ஆல விழுதுகளில்
மஞ்சள் அலகை  உரசி
விளையாடிக் கொண்டிருகின்றன
சாம்பல் நிறமொத்த
பெயரற்ற பறவைகள்

வெள்ளைப்   பஞ்சுத் துண்டுகள்
ஒன்றோடொன்று மோதி
யானைக் கூட்டங்களென
திரண்டு நிற்கின்றன

காலிடறி விழுந்து
காலுதறி பிரண்டு
வேகமாய் நகரும் வரிசைக்குள்
நுழைந்து கொள்கிறது

கண்ணிர் சுரக்கும்
மழைப்  பாடலின்
கடைசி வரியின்
பிரக்ஞையற்று
மூலையில் கருத்த பிசாசின்
மடியில் சுருண்டு
பாம்புகள் பற்றிய
கனவொன்றில் உறையத் துவங்கிற்று.

Monday, March 25, 2013

பிடித்தம்

அஸ்கருக்கு
முகத்தில் பருக்கள் வந்திருக்கிறது

இப்போதெல்லாம் அவனுக்கு

செடிகள் வளர்க்கப் பிடிக்கிறது
பறவைகள் வளர்க்கப் பிடிக்கிறது
மீன்கள் வளர்க்கப் பிடிக்கிறது

கைப் பேசியில்
பாடல்கள் கேட்கப் பிடிக்கிறது

கைகளை காற்றில்
சிறகென விரித்து
சைக்கிளில் பறக்கப்  பிடிக்கிறது

வாப்பாவின் பைக்கை
யாருக்கும் தெரியாமல்
ஓட்டப்  பிடிக்கிறது

திருச்செந்தூர் பாசஞ்சரில்
சிகை பறக்க
காற்றோடு மோதும்
படிக்கட்டுப் பயணம்  பிடிக்கிறது

வீட்டில்
தனக்கென்று ஒரு அறை
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

அதிக நேரம்
கண்ணாடி முன்னின்று
கவனமாக தனக்குப் பிடித்தமாதிரி
தலை வாரிக்கொள்ளப்  பிடிக்கிறது

எப்போதும்
கைகுட்டையோடு ஒரு சீப்பையும்
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

கதீட்ரல் நிருத்தத்தில் இறங்கும்
எஸ்தரின் தலையிலிருந்து விழுந்துவிட்ட
ரோஜாப்  பூவும் பிடிக்கிறது.


நன்றி - உயிரோசை

Thursday, March 21, 2013

குருவிகள் (மீள்பதிவு)


அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

000

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...

நன்றி - உயிரோசை

உல‌க‌ சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு (20-03-2013)
http://en.wikipedia.org/wiki/World_Sparrow_Day

Saturday, March 16, 2013

எழுத்து விளையாட்டு

பெட்டியில் இருந்த
ஒரு எழுத்தை
கையில் எடுத்து

"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "V" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "I" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "B" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "G" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "O" சொல்லு

வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்

நஸ் ரீன் :  இல்லம்மா "R" சொல்லு

"A" எந்த நிறத்தில் இருக்கும் ?
"A" க்கு ஏதும் நிறமுண்டா ?

"A" நிச்சயமாக
      அந்த பெட்டிக்குள்
      இருக்க வேண்டுமா என்ன?


நன்றி - உயிரோசை
Thursday, March 14, 2013

பீப்பாய் விளையாட்டு -2

பீப்பாயின்
வாய் பிளந்த பகுதியை
காதருகில் வைக்கிறான் 


தலை சுருக்கி
நாடி நெஞ்சையழுத்த
கன்னங்கள் மேலெழும்பி   
கண்களைச் சுருக்கி
வெள்ளை பற்கள் தெரிய
சிரிக்கிறான்

சமனிலை இழந்த நடையோடு
என் காதருகில்  வைக்கிறான்

மெல்லிய பனித்திரையில்
பெருஞ்சினங்கொண்டு
ஆர்பரிக்கிறது
நீலக்கடல்

மீண்டும்  மீண்டும்
காதருகில் வைக்கிறான்

கைதட்டிச் சிரிக்கிறான்

     
    

Wednesday, March 13, 2013

பீப்பாய் விளையாட்டு -1

பெரிய பீப்பாயை திறந்து 
சின்ன பீப்பாயை விடுவிக்கிறான்

ஒரு முட்டையிலிருந்து குஞ்சை
விடுவிப்பதைப் போல

பிறகு
சின்ன பீப்பாயை மீண்டும்
பெரிய பீப்பாய்க்குள் அடைக்கிறான்

குஞ்சை மீண்டும்
முட்டைக்குள் அடைப்பதைப்  போல
தோன்றுகிறது.


அபத்தம்


ஒரு நரைமயிரின் அளவு
மெல்லிய கீறல் விழுகிறது
எனது  பிரபஞ்ச விதியின் மேல்

அவள் 
தனது கைக்கடிகாரத்தை
1,12,11...
சுழற்றிக் கொண்டிருக்கிறாள்.


Tuesday, March 12, 2013

பீப்பாய் விளையாட்டு


கருப்பு , வெள்ளை , சிவப்பு ,பச்சையென 
வெவ்வேறு நிறங்களில்
பெரிதும் , சிறிதுமா
பீப்பாய்கள்
விளையாடக் கிடைத்தன
ஒரு வயதான மகனுக்கு.

பீப்பாய்களை 
தனித்தனியே வரிசையாக அடுக்கினான் 
பிறகு 
ஒன்றன் மீது ஒன்றாக  அடுக்கினான்

பெரிய பீப்பாய்க்குள்
சின்னதை வைத்துப் பூட்டினான்

பெரிய பீப்பாயை
சின்ன 
பீப்பாய்க்குள்
வைத்துப் பூட்டச்   சொன்னேன்

ஒரு அசட்டுச்  சிரிப்போடு
நிராகரித்து விட்டு
விளையா
ட்டைத்  தொடர்ந்தான்  

Friday, March 8, 2013

பிரஞ்னையற்ற பொழுதுகள்

அந்தக் கோடை
மிகவும் மோசமானதாக இருந்தது

எனது
நீரை முற்றிலுமாக உறிஞ்சியது

எனது
உணவுகளை களவாடியது

எனது
ஆடைகளை , கூடாரங்களை எரித்தது

எனது
தலையைப் பற்றி  இழுத்தன
இறப்பின் அருவருப்பான கைகள்

எனது
ஆன்மா உயிர்ப்பின்
பாடலொன்றை முணுமுணுத்தது

எனது
பரிசுத்தமான காதலின்
உயிர்த் துளியை
உன் மீது வீசினேன்

மழை மேகங்களைத் தந்தாய்

எனது
பிரபஞ்சத்தை
நானே 
உருவாக்கினேன்


நான்
மீண்டு வந்தேனா?
அல்லது
காலத்தின் கருணையா?

Saturday, February 2, 2013

கவிதைகள்

0.
நமக்குப்  பிடித்தமான
ஒரு உயிரினமாக 
உருவெடுத்துக்கொள்ள முடிந்தால் 
எவ்வளவு நன்றாக இருக்கும்
குறிப்பாக 
ஒரு வண்ணத்துப்பூச்சியாக ......

0.

சமீபமாக 
முன்பிருந்ததை விடவும் 
தலைமை என்பதை 
மிகுந்த கசப்பானதாகவே 
உணர்கிறேன்.
எத்தனை குரூரம் 
எத்தனை சூழ்ச்சி 
எத்தனை வன்மை 
எத்தனை சுயநலம் 
எத்தனை பொய்
...........................................
..........................................
...........................................

ஒரு  வண்ணத்துப்பூச்சிக்கு  கூட 
துப்பாக்கியை கையாள 
கற்றுக்கொடுப்பார்கள்  போலும் .நன்றி - உயிரோசை