Thursday, June 13, 2013

பிரியங்களுக்காக

கண்விழிக்காமல் காற்றில்
முலை தேடும் பிள்ளையை
என்ன சொல்லி தேற்றுவது ?

சீத்தாப்பழம் கொறிக்கும் அணில்களை
வேப்பம்பழம் கொத்தும் காக்கைகளை
புல்மேயும் பசுக்களை
பால்குடிக்கும் பூனைகளை
மீன்முள்   கடிக்கும் நாய்களை  யெல்லாம் கட்டி
எத்தனை நாட்களை கடத்துவது  ?

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்களுக்கான ஆறுதல்

யுகங்களென கழியும் நாட்களை தவிர்த்து
வாசல் கதவிற்குப்பின்னால்
காத்துக்கிடக்கிறோம்
உனது காலடி ஓசையில்
உதிரும் பிரியங்களுக்காக .



Tuesday, June 11, 2013

பதைபதைக்கும் பிரிவின் கணங்கள்

எப்படி எதிர்கொள்வதென்று  தெரியவில்லை?
எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று புரியவில்லை ?
எப்படியிருக்கும்  நீ பிரியும் அந்த கணம் ?

நீ தரப்போகும் அந்த முத்தத்தை
எப்படி ஏற்றுக்கொள்வது?

கால் பெருவிரலில் சிந்தும்
கண்ணீர் துளியை என்ன செய்வது ?

உன் கையசைப்புக்கு
நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ?

ஏற்கவும் நிராகரிக்கவும்
முடியாமல் தவிக்கும் என்னை
எப்படி எதிர்கொள்வாய்?

மலையை கடக்கும் புளுவென
அந்தக் கணத்தை நோக்கியே நகரும் காலத்தை
நிதானிக்கவே முடியவில்லை

இப்போது
என்னை குழந்தையாக மாற்றும்
ஒரு புத்தகமொன்றிற்குள் ஒளிந்து கொள்ளப்போகிறேன்