Thursday, July 23, 2009

பகிர்ந்து கொள்கிறேன்.



அன்போடு விருதை வழங்கியவர்கள்
நேசமித்ரன் அவர்களும் , வித்யா அவர்களும்.
அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி.

பகிர்ந்து கொள்ளுதல் எப்பொழுதும்
மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
நான் ரசிக்கும் சிலருக்கு ஏற்கனவே
விருது கிடைக்கப்பட்டதால் அவர்களுக்கு
தர இயலவில்லை.அது போக ஆறு பேருக்கு
மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டு
இருப்பதால் சிலருக்கு தர இயலவில்லை.


நிர்வாணம் - ஞானசேகர்

பென்சில் - ஆ.முத்துராமலிங்கம்

வேடிக்கை - கார்த்தி

பட்டாம்பூச்சி விற்பவன் - ரெஜோ

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

எம்.ரிஷான் ஷெரீப்



இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



Sunday, July 19, 2009

குறிப்புகளும் , அது சார்ந்தும்

காலையில்
பூட்டிவிட்டுத்தான்
சென்றிருந்தேன்.

பின்னிரவில் திரும்பியதும்
உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

கதவைத் தட்டினேன்

துல்லியமாக
எனது குரலிலேயே
யாரென்ற கேள்வி வந்தது

நடுக்கத்துடன்
நான்தான் என்றேன்


திறக்கப்பட்ட அறையின் சுவரில்
தற்கொலை பற்றிய
குறிப்புக்களை எழுதியிருந்தான்.

0

வழக்கத்தை விட
நீண்டிருக்கிறது இரவு

நிலவற்ற வானில்
பூச்சிகளென அலைந்து கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்

மௌனித்திருக்கிறது
கடல்

எங்கும் வியாபித்திருக்கிறது
பிணநெடி

எல்லா நொடியிலும்
மரணம் நிகழ்த்தப்படுகிறது

தேவதையின் கழுத்தையறுத்தவன்
"இனி விடியப்போவதில்லை ?" என்றான்

கொலையை விட
மேலானது
தற்கொலை
என்றான் குறிப்பெழுதியவன்.

நன்றி- உயிரோசை

Tuesday, July 14, 2009

பற்றுதல்

நினைவு தெரிந்த
நாளிலிருந்து
நின்றிருக்கிறது

அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்
பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்
அவர்களுக்கும் அப்படியே

சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பூமியுடனான அதன்
நேசத்தை

"யாரும் தூக்குப்போட்டுக் கொண்டதில்லையா ?"
என்று கேட்டாள் மறுமுனையிலிருந்து

Saturday, July 11, 2009

இடைவெளி

அடர்ந்து வளர்ந்திருக்கின்றன
மரங்களும் செடி கொடிகளும்
புல்வெளியெங்கும் பனித்துளி
சலனமற்றிருக்கிறது நீர்நிலை
பூக்களின் வாசம்
நிரம்பியிருக்கிறது காற்றில்
பெயர் தெரியாத பறவைகளின்
ஓசை இசையென
வியாபித்திருக்கிறது
இங்கு
முழு சுதந்திரம்
அளிக்கப்பட்டிருக்கிறது
மனமெங்கும் மகிழ்ச்சி

அடரிருளில்
காதைக் கிழிக்கும் இரைச்சலில்
இரண்டடி இடைவெளியில்
பாய்கிறது
எக்ஸ்பிரஸ் இரயில்

இரைச்சலில் சொல்லிக்கொண்டேன்
இடைவெளி
இல்லமலிருந்திருக்கலாமென்று.

Wednesday, July 8, 2009

அது - வாழ்வு .

முழுவதுமாய் புறக்கணித்துவிட்டது
தற்கொலை
புசித்து பசியாறி
மலம் கழித்துச் செல்கின்றன
மிருகங்கள்
கனவுகள் வந்தமர
கிளையேதுமில்லை
அநாமதேயமாய் கிடக்கின்றன
தீர்ந்த மதுப்புட்டிகள்
ஒளிந்துறங்க
வாசல் கடக்கையில்
மறைக்க அனுமதிக்கப்படுகின்றன
நிர்வாணம்
மாதவிடாய் பஞ்சோடு
வீசியெறியப்படுகின்றன
அதுவும், அது சார்ந்த
சகலமும்

நன்றி- உயிரோசை

Monday, July 6, 2009

தடுப்பு

யாராவது முதுகில்
அடித்து விடுகிறார்கள்
பாய்ந்து சத்தமிட்டு
மிரண்டோடுகிறது பூனை
ஏதோ ஒன்று கடித்துவிட்டு
மறைந்து விடுகிறது .

நாயின் குரலில்
கதவில் மோதுகிறது
சாத்தான்
பாம்புகள் நெளிகின்றன
பிணம் தேடி அலைகின்றன
பறவைகள் சில
இறந்த மூளையை
புசித்துக் கொண்டிருக்கின்றன
புழுக்கள்

கைதவறி விழுந்துடைந்த
கண்ணாடித் தொட்டி மீனென
துடிக்கிறது இதயம்

தூக்கம் தடுக்கும்
மாத்திரையை
தேடியலைகிறேன்.

நன்றி- உயிரோசை