Thursday, March 28, 2013

மழையும் , பாம்புகளும்

வெகு தொலைவிலிருந்து
கவனிப்பாரற்று
உமிழ்ந்து கொண்டிருக்கிறது
வெறுப்பின் விஷமேறிய
கூர் பற்களை

சலனமற்ற ஆற்றின்
மேல்பரப்பில் தவழ்ந்து
தன்னைத் தனித்து
அலையெழுப்புகிறது

கவிழ்ந்த மலையென
தடித்து அடர்ந்து கிளைவிட்ட
ஆல விழுதுகளில்
மஞ்சள் அலகை  உரசி
விளையாடிக் கொண்டிருகின்றன
சாம்பல் நிறமொத்த
பெயரற்ற பறவைகள்

வெள்ளைப்   பஞ்சுத் துண்டுகள்
ஒன்றோடொன்று மோதி
யானைக் கூட்டங்களென
திரண்டு நிற்கின்றன

காலிடறி விழுந்து
காலுதறி பிரண்டு
வேகமாய் நகரும் வரிசைக்குள்
நுழைந்து கொள்கிறது

கண்ணிர் சுரக்கும்
மழைப்  பாடலின்
கடைசி வரியின்
பிரக்ஞையற்று
மூலையில் கருத்த பிசாசின்
மடியில் சுருண்டு
பாம்புகள் பற்றிய
கனவொன்றில் உறையத் துவங்கிற்று.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சூழல் வர்ணனை அருமை...