Monday, May 19, 2014

ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி

எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி .க .சி தாத்தாவையும் , ஆச்சியையும் தெரியும் .21 E சுடலைமாடன் கோவிலுக்குச் சென்றால் என் தாயாரும் , தங்கையும் ஆச்சியிடம் ஊர் கதைகள் பேசி வருவார்கள்.நாங்கள் காரைக்குடிக்கு கல்லூரிக்குச் செல்லும் போது ,ஜனநேசன் சித்தப்பாவுக்கு கடிதம் எழுதிக்கொடுத்தும் , தொலைபேசி செய்தும் எங்களை  நன்றாகப் பார்த்துக்கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்கள். சித்தப்பா வீட்டில் நாங்கள் அவர்கள் பிள்ளைகளை போலவே இருந்தோம்   ,இருக்கின்றோம் .அந்த பூஞ்சோலைக் காண வழியை  தி .க .சி தாத்தா எங்களுக்குக் காட்டித்தந்தார்கள் .சித்தப்பாவோடு எப்போது தொலை பேசினாலும், எங்களை விசாரிக்காமல்  இருக்க மாட்டார்கள்.நாங்கள் சித்தப்பா வீட்டில் இருந்தால் நாங்களும் தாத்தாவோடு பேசுவோம் .நான் ஒரு கவிதையை எழுதி   சித்தப்பாவிடம் காண்பித்தேன், சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார் பின்பு அந்த வாரம் வண்ணக்கதிரில் அந்த கவிதை பிரசுரமானதும் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் காண்பித்தார் .
ஒருமுறை பேசும்போது "கவிதை நல்லாவந்திருக்கு ,நிறைய வாசிங்க நிறைய எழுதுங்க ,ஜனநேசன்  சித்தப்பா கிட்டையோ ,அப்பா கிட்டையோ காட்டி சரிபார்த்துக்கனும்" என்றார்கள் .  பிறகு வேலை தேடும்போது ,எனக்கு அவர் உறவினரின் நிறுவனமொன்றில் வேலை வாங்கித் தந்தார்கள்.
எங்கள்  திருமணமெல்லாம்  அவர்களின் தலைமையிலும் ,நல்லாசியிலும் தான் நடந்தது .  நெல்லைக்குச் சென்றால் அப்பா , நான் ,என் மகன் மூவரும் சென்று நேரில் பார்த்து வருவோம் .எப்போது சென்றாலும் வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டுத்தான் போவார்கள் .

நீண்ட நாட்களுக்குப் பிறகு தாத்தாவை நெல்லையில் உள்ள வ. உ.சி திடலில் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன்.நிகழ்ச்சி முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தார்கள் . என்னை பார்த்ததும் " வாங்க ..வாங்க ..எப்படி இருக்கீங்க என்றார்கள் ", அப்பா சவுகர்யமாக இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள் .உடனிருந்தவரை "இவரு சரவணன் ,இப்ப  எனக்கு உதவியா இருக்கார் , சினிமா துறை சார்ந்து படித்திருக்கிறார் "   என்றார்கள்.பிறகு சரவணன் பக்கம் திரும்பி "விசாரித்ததுல இன்னைக்கு லெனின்  வர்ற மாதிரி தெரியல ,நாளை அல்லது நாளை மறுநாள் வருவர் போல , உங்களைப் பற்றி பேசுகிறேன்." என்றார்கள். சரவணனையும் என்னையும் "வாங்க சாப்பிட்டுட்டு போலாம் "    என்றார்கள்  .நாங்கள் சாப்பிடவில்லை ,அவருக்கான டோக்கனில் இரண்டு சப்பாத்தியும் ,ஒரு காப்பியும் வாங்கி வந்தார் சரவணன் . மதியம் சாப்பிட பிடிகல அன்ன துவேசமாய்டுது ,இப்ப கொஞ்சம் பசிக்கிறது " என்று சிரித்துக்கொண்டே சாப்பிட்டார்கள் .ஆட்டோவில் போகும் போது சித்தப்பாவின் (ஜனநேசன் ) "முரண்நகை" சிறுகதையை சிலாகித்துக்கொண்டே வந்தார்கள் .இறங்கியதும் "வாங்க வீட்டுக்கு போவோம் " என்றார்கள் ."வயசாயிடுது ,இருட்டு வேளைல சரியா கண்தெரிய மாட்டேங்குது" என்று சொல்லிக்கொண்டே நடந்தார்கள். "கி.ரா வுக்கு  செப்டம்பர் வந்தால் 91 ஆக போகுது , என்னோட ஒரு வயசு சேத்தி "என்று சொல்லி அண்ணார்ந்து  பிரம்மாண்டமாக சிரித்துக்கொண்டார்கள்.வீட்டுக்கு வந்ததும் "குறுந்தொகை(திருவேந்தி) "     புத்தகத்தை தந்தார்கள்.மகன் எழுதியது படியுங்கள் என்றார்கள் .
"என்ன வேலை இருத்தலும் ,படிக்கிறதையும் ,எழுதுவதையும் ,நிறுத்த வேண்டாம் ". என்றார்கள் .
"அப்புறம் வீட்டுக்கு போனதும் , அப்பாகிட்ட , வல்லிக்கண்ணன் புத்தகம் ஒன்றும் ,"எஸ்.பொ" கிட்ட சொல்லி அவர் கொண்டு வரவேண்டிய புத்தகமொன்றும் ,இன்னும் இரண்டு மாசத்துல கொண்டு வரச் சொன்னேன்னு சொல்லுங்க ". "அந்தப் புத்தகங்களை , என் கண்ணுள்ள போதே  பார்த்திடனும் " என்றார்கள் மாத்திரையை விழுங்கிவிட்டு .
"இன்னும் மூன்று மாதம் கூட தாங்க மாட்டேன், மறக்காம சொல்லுங்க " என்றார்கள் .கனத்த மனதுடன்  அன்று விடை பெற்றுக்கொண்டேன்.

கட்டுரையாளர்   : கழனியூரன் மகன் .

Saturday, May 17, 2014

தொலை தூர விடியல்

மீளவே முடியாத
வெளியொன்றிற்குள் 
துப்பாக்கிகளின் முனையில்
தள்ளப்படுகிறோம்

ஆயிரமாயிரம் கண்கள்
உன்னை மேய
சாலையோரம் நீ மலம்கழிகிறாய்
சாலையோரம் நீ குளிக்கிறாய்
சாலையோரம் நீ பாலுட்டுகிறாய்
பிச்சையெடுத்த உணவை உண்கிறாய்

வெளியெங்கும் நிரம்பித்தழும்புகிறது
அகோர சிரிப்பின் ஒலிகளும்
விஷமேறி பழுத்த கைகளும்

நீ ஒரு துர் ஆத்மாவாக
மாற எத்தனிக்கும் அந்த கணம்
பாலுக்கு அழும் குழந்தை
கண்விழிக்கச் செய்கிறது .

Thursday, November 14, 2013

நிலவென

கவிதையின்  வருகைக்காக
காத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில்
நிலவென வந்தாய் .

Thursday, June 13, 2013

பிரியங்களுக்காக

கண்விழிக்காமல் காற்றில்
முலை தேடும் பிள்ளையை
என்ன சொல்லி தேற்றுவது ?

சீத்தாப்பழம் கொறிக்கும் அணில்களை
வேப்பம்பழம் கொத்தும் காக்கைகளை
புல்மேயும் பசுக்களை
பால்குடிக்கும் பூனைகளை
மீன்முள்   கடிக்கும் நாய்களை  யெல்லாம் கட்டி
எத்தனை நாட்களை கடத்துவது  ?

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்களுக்கான ஆறுதல்

யுகங்களென கழியும் நாட்களை தவிர்த்து
வாசல் கதவிற்குப்பின்னால்
காத்துக்கிடக்கிறோம்
உனது காலடி ஓசையில்
உதிரும் பிரியங்களுக்காக .Tuesday, June 11, 2013

பதைபதைக்கும் பிரிவின் கணங்கள்

எப்படி எதிர்கொள்வதென்று  தெரியவில்லை?
எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று புரியவில்லை ?
எப்படியிருக்கும்  நீ பிரியும் அந்த கணம் ?

நீ தரப்போகும் அந்த முத்தத்தை
எப்படி ஏற்றுக்கொள்வது?

கால் பெருவிரலில் சிந்தும்
கண்ணீர் துளியை என்ன செய்வது ?

உன் கையசைப்புக்கு
நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ?

ஏற்கவும் நிராகரிக்கவும்
முடியாமல் தவிக்கும் என்னை
எப்படி எதிர்கொள்வாய்?

மலையை கடக்கும் புளுவென
அந்தக் கணத்தை நோக்கியே நகரும் காலத்தை
நிதானிக்கவே முடியவில்லை

இப்போது
என்னை குழந்தையாக மாற்றும்
ஒரு புத்தகமொன்றிற்குள் ஒளிந்து கொள்ளப்போகிறேன்