Thursday, April 30, 2009

மழையோடு

மழை பற்றிய
உரையாடல்

மழை பற்றிய
கவிதை

மழை பற்றிய
இசை

மழை பற்றிய
காட்சிகள்

மழையோடு
கழிகிறது
இந்தக் கோடை

வேண்டி ....

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

தாய் இருந்தும்
தந்தை இருந்தும்

உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .

அன்பின் குறிப்புக்கள்...

அடர்த்தியான
உன் மௌனத்தை
உடைத்துவிட்டது
அந்த இசை..

எனக்கான பாடலுக்கு
ஆலபனை செய்யத்
துவங்குகிறது
உன் இதழ்கள்..

0

எறும்புக் கண்ணினும்
நுண்ணிய துளையிலிருந்து
கசிகிறது
அடர்த்தியான உன் மௌனத்திலிருந்து
எனக்கான பாடல் .

தயக்கம் ..

இறுதிச் சந்திப்பிற்குப்
பின்னும்
உச்சரிக்கப்படாமல்
தங்கிவிட்டன
சில வார்த்தைகள்.

நிராகரிப்புகளைத் தாண்டி
உள்ளத்தின் ஓரிடத்தில்
உறைந்த வார்த்தைகள்
அழுத்திப் பிடித்திருக்கிறது
நம்மிடையேயான தொடர்பை
முடிவற்று நீளும்
காலம் போல..

பாதை..

பிணங்களின் குவியலைத் தாண்டி
கண்ணீரோடு வீட்டுக்கான
பாதையொன்றில் விரைகிறது

சிதைந்தது போக
மீந்து போன ஒற்றைக் கையை
கவ்விக்கொண்டு
அவன் வளர்த்த நாயொன்று

வெளியெங்கும் விரவிக்கிடக்கிறது
கசப்புத்தன்மையும்
வெறுப்புக்களும்

சிந்திய கண்ணீர்த்துளிகளும்
உரைந்த ரத்தமும்
மின்னிக் கொண்டிருக்கின்றன
இரவுகளில்.

கடலில் சேர்க்கிறது
கடலை நம்பி வாழ்த்த
அவர்களின் பாதை.

ஆறுதல் ...

தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்

வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்

தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...

தவிப்பு...

தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.

வருகை..

வழக்கமாக நீ
கடந்து செல்லும்
நதிக்கரை பாதையோரம்
காத்துக் கிடக்கிறேன்
மெய்ப்படவில்லை
உனது வருகை

வாசல் கதவு திறக்கப்படாத
பூக்கள் மொட்டவிழ்கிற
அதிகாலைப் பொழுதொன்றில்
வருகை புரிகிறாய்
என் அறை சாளரம்
வழி உட்புகுந்த
வண்ணத்துப் பூச்சி.

Monday, April 27, 2009

ஒத்ததிர்வு...

நாங்கள்
நண்பர்கள் தான்

எங்களின்
திசையும்
வெளியும்
வேகமும்
வேறு வேறானவை.

ஒரே நேர்கோட்டில்
சந்திக்க நேர்ந்த
எங்களின் வார்த்தைகள்
புன்னகையோடு
கைகுலுக்குகின்றன.

அந்த கணம்
உடைந்து விடுகிறது
எங்களிடையே சூழ்ந்திருந்த
மௌனம் .


Thursday, April 9, 2009

இங்கே நின்றுவிடுதல்.

இங்கேயே நின்று விடுகிறேனே ?

நடுநிசியில்
அடர்ந்த காட்டுக்குள்
விரட்டப்பட்டவனின் மனமென
பயம் ஆட்கொள்கிறது.

தோற்றுப் போன
மாவீரன் ஒருவனின்
கொடுஞ்சினமென பாய்கிறது
என்மீதான கோபம் .

இந்த கணம்
மரணமடைபவனின் இதயத்துடிப்பென
மிரள்கிறது
நம்பிக்கை தொலைத்து.

கோடையில்
சிறு பொழுதேனும்
பொழியும் மழையென
என்மீதான கருணை .

அடர்ந்து பறக்கும்
பறவைகளின்
சிறகு விசிறிவிட்ட
மென் காற்றென
திளைக்கிறது
மனது .

மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.

Thursday, April 2, 2009

பூரணம்

அமிலத்திற்கு
ஒப்பானது
துக்கம்

குவளையில்
சிறு சிறு
துளிகளாக

அன்பின் குளுமை
தணிக்கிறது

நேசம் தொலைத்த
பொழுதுகளில்
குவளை முழுவதும்
நிரம்புகிறது அமிலம்

உஷ்ணம் தாளாமல்
உடல் பிரியும் உயிர்
பிறகு
வைகுண்டம் சேர்க்கிறது

அமிலம்மின்றி
ஏது பூரணம் .


Wednesday, April 1, 2009

இறுதித் துளியை

கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று
அதிகாலையில்

வாசல் செம்பருத்தி பூவின்
முகம் முழுவதும்
துக்கம்

துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்

பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று

இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை