Saturday, April 13, 2013

உண்டல்லவே

தெளிவாக தெரியத்துவங்கியது
கட்டங்கள்

அவர்கள்
விட்டுச்சென்ற அதே
நிலையில்

அருவாளோடு
துடியான சாமிவந்தாடும்
பெரிய வெள்ளை மீசைக்காரருக்கு
பதிலாக நீ

மேய்ப்பர் அற்ற
உனது இரைக்குப் பதிலாக
நான்

உனது பாய்ச்சலில்
சிக்கிக்கொள்ளாத
சாதுர்யமான எனது நகர்தல்
ஆச்சர்யமாய் இருக்கிறது

உயிரின் பிரியம் யாவருக்கும்
உண்டல்லவா?
   
 

Monday, April 1, 2013

கூடடைதல்

பச்சை விளக்கிற்கு
காத்திருக்கும் நொடிகளிலும்
விலங்கென உருமிக் கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

தார்ப்பாய் போட்டு மூடப்படுகின்றன
சாலையோர கடைகள்

கிளிப்பின் வாய்திறந்து விடுவிக்கப்படுகின்றன
காய்ந்த ஆடைகள்

எல்லா வீடுகளிலும்
ஜன்னல்கள் அடைக்கப்படுகின்றன

காற்றின் திசையில்
முதுகைக் காட்டி நிற்கின்றன
மரங்கள்

மின்கம்பியிலிருந்து விடுத்து
கரைந்து பறக்கின்றன
காக்கைகள்

வெண்மேகங்கள் கூடி
கருத்து நிற்கின்றன
அந்தப் பிரதேசத்தின் மேல்


கூடடைதலின்
கனவில் நனைந்து கொண்டிருக்கின்றன
பறத்தலை மறந்த
கூண்டுப் பறவைகள்




வேட்கை

மாமிசத்தை கிழித்துண்ணும்
கூர்மையான
இளமஞ்சள் அலகுகள்

சோர்ந்து
ஆனால் மினுமினுக்கும்
கருத்து உருண்ட கண்கள்

மரக்கிளையில் கவ்விநிற்கும்
கூர்நகங்களுடைய
கருத்த கால்கள்

களைப்பின்றி
சமுத்திரம் தாண்டும்
வெள்ளை சிறகுகள்

கூண்டின் மறுமுனையிலிருந்து
என் மீதான பாய்ச்சலொன்றில்
அடர்ந்து அதிர்ந்து
ஒலிக்கின்றன
பறத்தலின் வேட்கை.