Saturday, May 30, 2009

நின்ற அருவி.

மலையின் உச்சியில்
வழிந்த மேகம்
வேர்கள் நனைத்து
இலைகள் தழுவி
இடுக்குகளில் ஓடி
பிடிமானமற்று விழுகிறது

தாயின் உடலில்
சிதறிய நீரில்
குதுகலமாய் குளித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமி

கம்பியை இறுகப்பற்றி
கண்கள் மூடி
தன்னுள் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
தலை வெளுத்தவள்

பிறகு
ஈர உடலோடு
பிராத்தனை செய்கிறாள்
தாய்க்கும்
பிள்ளைக்கும்
ஆசீர்வாதம் செய்கிறாள்

சோர்ந்து சிவந்த
கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது

அவளுள் நின்ற அருவி.

Thursday, May 28, 2009

தாகம்.

நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று

எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.

Friday, May 22, 2009

என் கடலும் அவனும்.

இருவரும் தனித்தனியே
கடலை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்

அவன் கடலில் நானும்
என் கடலில் அவனும்
மிதப்பதென்பது
சாத்தியமற்றது எப்போதும்

இந்த விதியை
உடைக்கும்
திராணியோ ,
அனுமதியோ ,
யாருக்கும் தரப்படவில்லை

என் கடலின்
ஓசையையும்
நிறங்களையும்
இட்டு நிரப்புகிறேன்
ஒரு ஊடகம் வழியே

நண்பா,
உன்னால் எப்படி சொல்ல முடிந்ததென்று
தெரியவில்லை
" இது உன் கடலின்
ஓசையும், நிறமும் இல்லை ?" என்று.

Thursday, May 21, 2009

பொக்கிஷம்.

வழக்கமாக வீட்டிற்கு வரும்
பேருந்து கடந்துவிட்டால்
பேருந்து நிறுத்தத்திலேயே
காத்துக்கிடப்பாள்
நான் வரும் வரை

கத்தரிக்காய் சுட்டு
பிசைந்து வைத்திருப்பாள்
எனக்கு பிடிக்குமென்று

மூக்குப்பொடி
வாசம் வீசும்
தன் மடியில் கிடத்தி
தூங்க வைப்பாள்

தெருவில்
யானையோ
சிங்கமோ
குரங்கோ
நிற்கிறதென
ஆச்சர்யமூட்டி
கண் விழிக்கச்செய்வாள்

யாருடைய கையிலும்
கடைசிவரை கிடைக்கவில்லை
பாட்டியின் சிவப்பு மூக்குத்தி

பத்திரமாக இருக்கிறது
என் மன அறையில்
ஒரு பொக்கிஷமாக.

Tuesday, May 19, 2009

உள்வெளி

இருள் சூழ்ந்த
கூண்டொன்றில்
தனிமையில் அடைத்து வைக்கப்படுகிறாய்

உனது
அந்தரங்கங்கள் கூட
அறியப்படுகின்றன
அசைவுகளின் அதிர்வுகளில்

அசைவற்று
கிடந்த பொழுதுகளில்
உனது உயிர்ப்பை
உறுதிபடுத்துகிறது
உள்வெளியில்
சுனையென திறந்து வழியும்
திரவத்தின் சலனம் .

Thursday, May 14, 2009

அன்பிற்கும் உண்டோ...

ஐந்து வினாடிகளே
மீதமிருந்தது.

வாகனங்களுக்கு இடையில்
நெளிந்து ஓடி
தடுப்புச்சுவர் மேல்
கால்வைத்த கணம்
நிலைகுலைந்துவிட்டேன்

அனிச்சையாக
பிடிக்கும் பாவனையில்
கை நீட்டினாள்
காருக்குள் இருந்து .

இன்னமும் தெரியவில்லை
அவளின் நேசத்தில் மிதந்தவன்
காயப்படாமல்
எப்படி சாலையை கடந்தேனென்று .

Monday, May 11, 2009

நித்தியத்துவத்தின் ஒளி

மேஜையின்
விளிம்பில் இருக்கிறது

முக்கோண வடிவிலானது

அதன்
பக்கங்கள் ஒரே அளவில்லானவை.

அறையில்
நிரம்பிய ஒளியை
தன்னுள் அனுமதிக்கிறது

உள்வாங்கி , கிரகித்து
வண்ணம் தருகிறது
அதனதன் குணங்களுக்கேற்ப

அறையின்
சுவர்களிள்
வர்ணஜாலம் காட்டுகிறது

ஒரு கலைப்படைப்பென
தன்னை சிருஷ்டித்துக்கொள்கிறது

பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென.

Thursday, May 7, 2009

இந்த மனதிற்காக

எதிலும்
இருப்புக் கொள்ளாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது

அவசியமின்றி
மூச்சுக்காற்றில் நிறைந்திருக்கிறது
கோபம்

தன்னை எதிர்க்காத
ஒருவனை
சளைக்காமல்
தாக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன்
கணிப்பொறி விளையாட்டொன்றில்

நானும்
சிருஷ்டிக்கத் துவங்குகிறேன்
இப்பொழுது
எனக்கான ஒருவனை
இந்த மனதிற்காக.

Tuesday, May 5, 2009

பூக்கள்

உதிர்ந்த
பூக்கள்தான் என்றாலும்
கால்வைக்க முடிவதில்லை.

0
எப்படியாவது
சேகரித்து விடுகிறது
பூக்கள்
மழையின்
ஒரு துளியை
என் தலையில்
தெளிக்க.

0௦

இத்தனை
கனமாக இல்லை
கிளைகளுக்கு
காய்ப்பதற்கு முன்.

Monday, May 4, 2009

அந்தப் பாய்ச்சலில்...

எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.

எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்


அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது

மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.